இந்த பதிவுலகத்தில் அதிகமாக உபயோகபடுத்தப்படும் வார்த்தைகள் இரண்டு. 1.ரிப்பீட்டேய் ; 2.பின்நவீனத்துவம்
சில இழப்புகளின் பதிலீடாக தமிழ்ப் பதிவுலகம் பக்கம் வந்த எனக்கு, இந்த பின்நவீனத்துவம் என்கிற வார்த்தை முதலில் மிரட்சியை தந்தாலும், பின்பு, இது இன்னொரு வித தேடலை உருவாக்கும் என்று நம்ப துவங்கினேன். அதே நேரத்தில் பெரிய பசங்க சிலரின் எழுத்தின் சுவாரஸ்யம் காரணமாக, சில புத்தங்களின் அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. நகுலன் மற்றும் சாருவின் ஒரு நாவலை இருபது பக்கங்கள் கூட தாண்டமுடியாமல் வைத்துவிட்டேன்.. குருவி தலையில பனங்காயாகிவிட்டது.
அப்போது வாசிக்க துவங்கிய இரு கட்டுரை புத்தகங்கள்தாம் ரமேஷ்-பிரேமின் கட்டுரையும் கட்டுக்கதையும் மற்றும் பேச்சு-மறுபேச்சு.. நல்ல புத்தகங்கள். நிச்சயம் ஒரு பெரிய வாசிப்புக்கு தயார்படுத்தும். இந்த பதிவில் பேச்சு மறுபேச்சு புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையின் சில பத்திகளை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.
மேற்கின் பின்நவீனத்துவம் : பின்நவீனத்துவம் என்பது மேற்கின் தத்துவ, அரசியல், அழகியல் மரபுகளை மாற்று, உப தத்துவ, அழகியல், தத்துவ மரபுகளின் மூலம் கேள்விக்குட்படுத்தி, உள்வெளியாக ஆராய்ந்து, மாற்றுப் பார்வைகளை முன்வைத்த ஒரு தொகுப்பறிவு முறை. இதில் அறம் என்பதும், மற்றவற்றிக்கான இடம் என்பதும் முக்கிய இடம்வகிப்பவை. அதே சமயம் இது ஒற்றைத் தன்மை உடையதல்ல. பேரழிவை நிகழ்த்திய இரண்டு உலகப் போர்களைக் கண்டு ஃபாசசிம், ஸ்டாலிசம் என்ற போக்குகளால் தாக்கப்பட்ட ஐரோப்பிய அறிவுத்துறையினரும், கலைஞர்களும் அவர்களது தத்துவ மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்திய போது, பின்நவீனத்துவ நிலையைக் கண்டடைந்தனர். மேற்குலகின் வரலாறு, இறையியல், அரசியல், அறவியல் அனைத்தையும் மறுக்கவும், மறுபொருளாக்கம் செய்யவும் இக்காலம் பயன்பட்டது. எப்பொழுது நவீனத்துவமும், அறிவியக்கமும் தோன்றியதோ, அப்பொழுதே பின்நவீனத்திற்க்கான அடிப்படைக் கேள்விகளும் அங்கு உருவாகிவிட்டன. விமர்சன பார்வையும், அதிகார மறுப்பும் இதன் அடிப்படைகளாக அமைந்தவை. ஒற்றை மூலமும், ஒற்றை முடிவும் இல்லை என்று வேறுபாடுகளின், வித்தியாசங்களின் இருப்பை அங்கீகரித்து, அவற்றின் அழகைக் கொண்டாடுதல் இதன் முக்கியக் கூறு. மேற்கே மேற்கை சிதைவாக்கம் செய்துகொள்ளும் காலமே மேற்கின் பின்நவீனத்துவ இயக்கம் அல்லது போக்கு.
தமிழ்ப் பின்நவீனத்துவம் : ஆனால் இந்திய தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் என்பது வேறுபட்டது. வேறுபட்டு இருக்க வேண்டியது. தமிழில் நீண்ட மரபுடைய தத்துவ ஆய்வு நவீனத்தளத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை. முடிவுகள் மட்டுமே இங்கு வைக்கப்படுகின்றன. அவற்றை கண்டடையும் வழிகள் மறைக்கப்படுகின்றன. இதனால் தமிழ் பின்நவீனத்துவம் என்பது இன்னும் ஆய்ந்தறிய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றி ஆய்வு செய்யும் யாருக்கும், தமிழ் வரலாறு, தமிழின் மாற்று வரலாறு, தமிழ் உப மரபுகள், மாற்று சிந்தனைகள், இலக்கியப் பன்மை மரபுகள் பற்றிய அடிப்படையான மரபும், அக்கறையும் தேவை. தமிழிலக்கியத்தையும், இலக்கிய கோட்பாடுகளையும், தமிழிலுள்ள ஆயிரக்கணக்கான கதையாடல் வடிவங்களையும் முழுமையான நுண் வாசிப்பிலும், மறுவாசிப்பிலும் அணுகிய பிறகே, தமிழில் பின்நவீனத்துவம் பற்றியும் தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றியும் நாம் பேச முடியும்.
பின்நவீனத்துவ வாசிப்பு : பின்நவீனத்துவ நாவல் என்றோ, பின்நவீனத்துவ சிறுகதை என்றோ உலகில் எங்கும் எதுவும் இல்லை. பின்நவீனத்துவ வாசிப்பு மட்டுமே. Nouveau Roman, Meta Fiction நாவல், Hyper Reality நாவல், Sur-Fiction, Palimpsest History நாவல், Magical Realism நாவல், Ethnographic நாவல், Mythographic நாவல் என ஒவ்வொரு நாவலாசிரியரும், தமக்குகந்த அடையாளம் தந்து, தமது நாவல்களை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தையும் பின் நவீனத்துவ கால எழுத்துக்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டு, பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுத்துகிறார்கள். ஏனெனில் பழைய முறையிலான வாசிப்பு, எதையும் மேலோட்டமாக வாசித்து, ஒற்றை முடிவை, ஒற்றை மையத்தைக் கூறிவிடும். ஆனால், பின்நவீனத்துவ வாசிப்பு பலவகையாக பிரதியை அணுகி, அதன் பல தளங்களில் பயணப்பட்டு, அதுவும் ஒரு படைப்பு போல தன்னை வடிவமைத்து கொள்ளும். அதனால், பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீனத்துவ விமர்சனம், பின்நவீனத்துவ ஆய்வு போன்றவை மட்டும்தான் உண்டே தவிர, பின்நவீனத்துவ நாவல் என்று எதுவும் கிடையாது. அது மட்டும் அல்ல. பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீன காலப் பிரதிகளை மட்டும்தான் இப்படி பொறுப்புடன் ஆழமாக பன்முகத் தன்மையுடன் வாசிக்கும் என்பதல்ல; ஒரு வேத நூலையும், ஒரு மொழியில் முதன்முதலில் எழுதப்பட்ட புராணத்தையும் கூட சிரத்தையாக வாசிக்கும்.
தமிழில் எல்லாவிதமான கதையாடல்களும் வரவேண்டும். எதார்த்தவாத, இயற்கையியல்வாத, வெளிப்பாட்டிய வாத, மனப்பதிவு வாத, நினைவோட்ட உத்தியுள்ள, புராணத் தன்மையுள்ள, தொன்மத் தன்மையுள்ள, சித்தர் நடையுடைய, சொல்கதை மரபுள்ள, ஆவணப் படுத்தல் உத்தியுள்ள, வரலாற்று வாய்மொழி மரபுள்ள....... என நூற்றுக்கணக்கான கதையாடல்கள் பல்கிப் பெருகவேண்டும். இவற்றை பொறுப்புடன் வாசிப்பதுதான், வாசித்து அவற்றின் பன்முகத் தன்மையை பல தள அர்த்தத்தை வெளிப்படுத்துவதுதான் தமிழில் பின்நவீனத்துவத்தின் வேலை. இதில் பின்நவீனத்துவ உப்பு இல்லை. பின்நவீனத்துவ காரம் இல்லை என்று சொல்வது அரசியல் ஆதிக்கக் கதையாடல். இலக்கியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் : தமிழில் சங்க இயக்கியங்கள் தொடங்கி, இன்றைய சிறுகதைகள் வரை, உலக இலக்கியங்களுக்கு ஈடு செய்யும் ஏராளமான படைப்புகள் உள்ளன. அளவிலும் கூட, தமிழிலக்கியம் பெரும் பரப்பை உடையது. இவற்றை பலவகை சிந்தனை முறைகளை பின்னணியில் நுணுகி வாசித்து, உலக இலக்கியத் தளத்துடன் உரையாடலைத் தொடங்கவும், வளர்க்கவும் பின்நவீனத்துவப் பார்வையும், வாசிப்பும் மேலும் வழி அமைத்துத் தருகிறது. சிரத்தையுடன் அதைப் பயின்று, புதியன படைக்க வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் அறிவுத் தளமும் இயக்கமும் அழிந்து போகாமல் காப்பதற்கான காலத்தின் தேவை.
வாசகா; வாசகி : ஒரு நாவல் எழுதுவதென்பது எளிதான வேலை அல்ல. கடுமையான உழைப்பைக் கோருகிற விஷயம் அது. பன்முகப்பட்ட வாசிப்பும் பயிற்சியும் அதற்கு தேவை. என்பதனால் வாசிப்பு என்பதற்கும், பன்முகப்பட்ட வாசிப்பும் பயிற்சியும் உழைப்பும் தேவை.
-- தீராநதி டிசம்பர் 2003
புத்தகம் : பேச்சு - மறுபேச்சு (பின்நவீனத்துவம் நோக்கி)
எழுதியவர் : ரமேஷ்-பிரேம்
பதிப்பகம் : மருதா
விலை : Rs.150
நெற்றி பொட்டில் அடித்தாற்போல் இதுதான் பின்நவீனத்துவம் என்று சொல்வது அல்ல இக்கட்டுரை. மாறாக ஒரு எளிய வழியில் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள் : அய்யனாரின் இந்த பதிவு. இந்த பதிவுக்குள் சில சுட்டிகள் இருக்கும், அதை தொடரவும்.
Nouveau Roman, Meta Fiction, Hyper Reality, Sur-Fiction, Palimpsest History, Magical Realism, Ethnographic, Mythographic & etc - இந்தக் கூறுகளை அல்லது வகைகளை யாராவது விளக்கமாக எழுதியிருக்கிறார்களா அல்லது எழுத முன்வருவார்களா... உதவியாக இருக்கும்.. எனக்கு தெரிந்து, அனுஜன்யா, Magical Realism பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறார்.
மேலும், இந்த கட்டுரையை வாசிப்போர்கள் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களையோ சொல்லவோ, தொடர்புடைய சுட்டிகளை தெரியப்படுத்தவோ அல்லது சந்தேகங்களை கேட்கவோ கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வளர்மதியோ, அய்யனாரோ, சுந்தரோ, ஜமாலனோ, பைத்தியக்காரனோ, டிசே தமிழனோ, நாகார்ஜுனனோ மேலும் வலையில் இயங்கும் அத்தனை பெரிய தலைகளும், நமக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
அடுத்தபதிவில் ரமேஷ்-பிரேமின் கொலை மற்றும் தற்கொலை பற்றி மற்றும் சக்கரவாளக் கோட்டம் கவிதைத் தொகுதிகள் பற்றி..
இந்தக்கட்டுரை பலரை சென்றடைய வேண்டுமென்று நான் ஆசைப்படுவதால், தமிழ்மணம், தமிழிஷ் வோட்டு போடவும்.. :)