வட்டத்திற்குள் பெண்.. [தொடர் பதிவு]
அண்ணன் எம்.எம்.அப்துல்லா, இந்த தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.. நானும் எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து, நாட்கள் கடக்கிறது.. எனக்கு இது ஒரு கடினமான தொடர் பதிவு.. இந்த தலைப்பில் எனக்கு உடன்பாடு கூட இல்லை..
அதிலும் தலைப்புக்குள் எதையும் எழுதவும் தெரியாதெனக்கு..
உன்னிடமிருந்து
விலகி ஓட
எத்தனித்து எத்தனித்து
உன் வட்டங்களுக்குள்ளேயே
விழுந்து
வீழ்கிறேன்..
நீ ஒரு புதைக்குழி.
இப்படி ஒரு காதல் தோல்வி கவிதையை தான் எழுதமுடிகிறது.. வேறு எழுதலாம் என்று நினைத்தபோது, எதை எழுதவேண்டுமென்று கூட எனக்கு தெரியவில்லை.. பெண்களின் பார்வையில், இந்த தலைப்பை பற்றி சிந்தித்து (?!) எழுதலாம் என்று நினைத்தபோது, பெண்களின் பார்வை சிக்கவில்லை.. :)
வட்டத்திற்குள் பெண்.. என் வாசிப்பு வட்டத்திற்குள் இருக்கும், இங்கு வலைத்தளத்தில் எழுதும் நிறைய பெண்களில், எனக்கு பிடித்த பெண் கவிஞர் ஒருவரின் கவிதையை இங்கு பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.. பிடித்த கவிதாயினி ஒருவரை இப்பதிவை தொடர அழைக்கலாம் என்று எண்ணுகிறேன்..
அனிதா.. இவரின் கவிதைகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.. அவ்ளோ அழகா எழுதுவாங்க.. சமீபத்தில் (மார்ச் முதல் தேதி) ஒரு அழகிய பெண் மகவை பெற்றிருக்கிறார்கள்.. மேலும் அவர்களின் கவிதை தொகுதி, உயிர்மை பதிப்பகம் மூலம் புத்தகமாக வந்து இருக்கிறது.. இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை இந்த பதிவில் எழுதி இருக்கிறார்கள்.. அவருக்கு இந்தப் பதிவின் மூலமும், என் அன்பும் வாழ்த்துக்களும்..
அவரின் சில கவிதைகள் இதோ..
கற்பு...
இரவு நேர பேருந்து பயணத்தின்
அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...
காமமும் கோபமும்
ஒருசேர கிளர்ந்தெழ,
வருடலின் சுகம் மீறியும்
"பளாரென" அறைகிறேன்...
என் வருகையை
எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்-
கணவன் முகம் நினைத்து...
--OOO--
அடிமைகளை உருவாக்குவது எப்படி
மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்
ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.
என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்
எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.
வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.
ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்
மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்
--OOO--
அன்பின் விலைகள்
எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.
--OOO--
கதவு
கதவுகள் சூழ்ந்த அறையின் இருள் நீக்கி
பாதி திறந்திருக்கிறது ஒரு கதவு.
மயக்கம் தெளிந்தும்
கட்டப்பட்ட கைகளின் இறுக்கம் தளர்த்துவது
அத்தனை எளிதாய் இல்லை.
பாதி திறந்த கதவு வழி
உள்ளே வருகின்றன
பரிச்சயமற்ற குரல்கள்
தொடர்ந்து வீசுகிறது சாராய வாடை
எப்பொழுதுக்குமான இயலாமையில் அழைக்கின்றன
பிரியத்தின் குரல்கள்
அவ்வப்போது வரும் காற்று
தப்பித்தலுக்கான ஏக்கங்களை கூட்டிப்போகிறது
பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.
அவ்வளவே.
மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன
எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்.
--OOO--
கவிதைகள் எப்படி இருக்கு?? அவங்களோட அனேகக் கவிதைகள் எனக்கு பிடித்தமானவை.. இந்த கவிதைகளெல்லாம் ஒரு அடையாளம் மட்டுமே.. அவங்க வலைத்தளம் சென்று அனைத்து கவிதைகளையும் படிக்கவும்.. அவ்ளோ அழகான கவிதைகள்..
சரி.. இந்த தொடர்ப்பதிவிற்க்கு நான் யாரை அழைக்க போகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.. வேறு யார்.. கவிதாயினி ஸ்ரீமதி தான்.. ஏற்கனவே காணாமல் போன கனவுகள்! என்ற கவிதை தான், அவங்கள இந்த தொடர்பதிவுக்கு அழைக்க தூண்டியது.. [ஸ்ரீ, நீ கேட்கக்கூடும்.. "எங்கடா அந்த வழக்கொழிந்த சொற்களுக்கான தொடர் பதிவு" என்று.. அதற்கான வார்த்தைகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.. கிடைத்ததும் எழுதுகிறேன்.. :)]
10.04.2009

அருமையான கவிதைகள்... சீக்கிரம் அங்க கடைய விரிச்சு மொத்தமா படிச்சிட வேண்டியதுதான் :))
ஏற்கெனவே படித்திருக்கிறேன் அனிதாவின் கவிதைகள்...உண்மைதான் நன்றாக எழுதுவார்...
//தலைப்புக்குள் எதையும் எழுதவும் தெரியாதெனக்கு..//
ஓ வட்டத்துக்குள் சிக்காத சரவணனா????
அன்புடன் அருணா
//கவிதைகள் எப்படி இருக்கு??//
அத்தனையும் அருமை,
நான் இது வரைக்கும் அவர் கவிதைகளை படித்திரிவில்லை ஒரு நல்ல கவிஞரை அறிமுக படுத்தி வைத்திரிக்கீங்க..
நல்ல பதிவு.
//ஜி said...
அருமையான கவிதைகள்... சீக்கிரம் அங்க கடைய விரிச்சு மொத்தமா படிச்சிட வேண்டியதுதான் :))//
repeatuu...
நல்ல பதிவு... :)
அனிதாவின் கவிதைகள் படித்திருக்கிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி..
அப்ப இது தொடர் பதிவா...?
//உன்னிடமிருந்து
விலகி ஓட
எத்தனித்து எத்தனித்து
உன் வட்டங்களுக்குள்ளேயே
விழுந்து
வீழ்கிறேன்..
நீ ஒரு புதைக்குழி.//
அருமையான கவிதை
சரவணா!
அனிதாவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி :-)
நல்லா இருக்கு சரவணா
கடைசி வரி இல்லாமல் படிச்சா கூட
அனிதா அவர்களை வாசித்திருக்கிறேன்,
அருமையான கவிதைகள் சரவணா பகிர்வுக்கு நன்றி...
அருமையான கவிதைகள்...
மிக்க நன்றி அண்ணே.
:)
//ஸ்ரீ, நீ கேட்கக்கூடும்.. "எங்கடா அந்த வழக்கொழிந்த சொற்களுக்கான தொடர் பதிவு" என்று//
சத்தியமா இத தான் கேட்கலாம்ன்னு வந்தேன்... நீயே போட்டு எஸ் ஆகிட்ட.. :)) கொஞ்சம் லேட் ஆகும் எழுத பரவால்லயா??
//கவிதைகள் எப்படி இருக்கு??
சூப்பர்ப்பா இருக்கு. நான் கவிதை கூட படிக்கலாம் போலிருக்கே. :)
உன்னிடமிருந்து
விலகி ஓட
எத்தனித்து எத்தனித்து
உன் வட்டங்களுக்குள்ளேயே
விழுந்து
வீழ்கிறேன்..
நீ ஒரு புதைக்குழி
nalla iruku pa
@ஜி : படிங்க.. நன்றி.
@அன்புடன் அருணா : நன்றிக்கா. எழுத தெரியாதென்பதை நீங்க சொல்வது போலவும் சொல்லலாமோ.. :)
@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க.
@ நாணல் : நன்றிங்க..
@தமிழன்-கறுப்பி... : ஆமாம் தமிழன்.. தொடர்பதிவேதான்..
@புனிதா : நன்றிங்க புனிதா..
@புன்னகை : நன்றிங்க.
@yathra : நன்றிங்க யாத்ரா..
@புதியவன் : நன்றிங்க புதியவன்.
@Divyapriya : நன்றிங்க dp
@எம்.எம்.அப்துல்லா : நான் உங்களுக்கு அண்ணணா.. அவ்வ்வ்வ்..
@ஸ்ரீமதி : நீ கேட்பாய் என்று எனக்கு தெரியும்.. அதான் நான் முன்னாடியே சொல்லிட்டேன்..
@Karthik : //நான் கவிதை கூட படிக்கலாம் போலிருக்கே. :)//
இதுக்கு என்ன தம்பி அர்த்தம்..
@gayathri : நன்றி காயூ..
முதல் முறையாக கொஞ்சம் சுமாரான உன் கவிதையைப் பார்த்து எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி.!
அதை போக்கும் வகையில் அனிதா என்ற ஒரு அழகான அறிமுகம். பின்னிட்டாங்க.. கற்பு, அன்பின் விலை.. Wonderful!
@ஆதிமூலகிருஷ்ணன் : சந்தோஷமா.. அனிதாவின் எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கும்.. படிச்சு பாருங்க.
//இதுக்கு என்ன தம்பி அர்த்தம்..
நான் கவிதை அதிகம் படிப்பதில்லை. ஆனால் படிக்கலாம் போலனு தோணுச்சு அதான். :)
Post a Comment