June 29, 2009

குரல்களால் தீர்மானிக்கப்படுகிறவன் (அ) கொலைக்கு சாக்கு போக்கு சொல்லுதல்..


உன்னை கொலை செய்ய
விரும்பவில்லை.
ஆனால்
ஏதேதோ என்னை தூண்டுகிறது
உன்னை மட்டும் கொலை செய்ய.
காதலியை கொலைசெய்வது
பரமசுகம் என்கிறது உள்ளுக்குள்
ஒரு குரல்.
அவள் பிரிந்து சென்ற
நம்பிக்கை துரோகத்துக்கு
பழிவாங்க வேண்டுமென்கிறது
ஒரு குரல்.
உனக்கு கிடைக்காதவள்
வேறு எவனுக்கும் கிடைக்ககூடாதென்கிறது
ஒரு குரல்.
அவளை கொலை செய்துவிட்டு
நீயும் தற்கொலை செய்துகொள் என்கிறது
ஒரு குரல்.
குரல்களால் தீர்மானிக்கப்படுகிறேன்
நான்.

12.02.2009

  • ரொம்ப நாள் முன்னாடி எழுதி draft-ல் இருந்தது.. வேறு எதுவும் புதுசா எழுதவில்லை என்பதனால் இதை publish பண்ணிட்டேன்.. :)

June 18, 2009

மழைக்கால கொடுங்கனவு..


மழைக்கால இரவுகளில்
நெடுஞ்சாலைகளில்
சீறிப்பாயும் வாகனங்களில்
நசுங்கிச் சாகும்
தவளைகளும் நத்தைகளும் சிறுஆமைகளும்
ஆவியாய் வந்து
என் கனவுகளில்
என்னை வேட்டையாட துவங்கும்
என்கிற பயத்தினாலேயே
மழைக்கால இரவுகளையெல்லாம்
விளக்குகளை அணைத்துவிட்ட
அறையின் மூலையில்
தூங்காமல் அமர்ந்தபடி கழிக்கிறேன்..
எனினும் பயமாயிருக்கிறது.
18.06.2009


வேண்டுகோள் : நான் சிறுகதையெல்லாம் எழுதினது இல்லை. எழுதவும் தெரியல.. ஏற்கனவே ஆதி அண்ணா எப்படி சிறு கதை எழுதறதுன்னு பதிவு போட்டு சொன்னாரு.. அதைவிட சிம்பிளா ("சிறுகதை for Dummies", "சிறுகதை writing in 24 hrs, in a week, in 10 days", மாதிரி), யாராச்சும் சொல்லிட்டு போனா புண்ணியமா போகும்.. இன்னும் பத்து நாள்தான் இருக்கு..

June 8, 2009

கண்ணாடியாலான கவிதை..


இக்கவிதையை படித்த பின்புதான்
என்னுடைய உண்மையான முகத்தை
நீ தெரிந்துக் கொண்டதாகவும்
நான் ஒரு துரோகி என்றும்
கொலைகாரன் என்றும்
சுயநலன்களுக்காக
பிறர் வாழ்வைக் கெடுக்கவும் துணிபவன்
என்றும்
மேலும் இன்ன பிற
கெட்டவார்த்தைகளாலும் திட்டிவிட்டு
நகர்ந்தாய்,
நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.

20.05.2009

June 1, 2009

அதிர்வுகள்..


இன்னமும்
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்
புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ..
என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்
உன்னிடம்
அதைத் தெரிவிக்க
மொழியும் இல்லாமல்
உன் பாதச்சுவடுகளை மோகித்து
கிடக்கிறேன்..

14.05.2009

May 14, 2009

இரையாகுதல்...


பின்னிரவு மழை நாளொன்றில்
என் அறையில் நடந்த
சம்பவம் இது.

எப்படியோ உள்நுழைந்திருந்த அதற்கு,
வெளிறிப்போன முகத்தோடு
இருக்கும் என்னை
உறுமியபடியே
சுற்றி சுற்றி வந்து
மேலும் பயமுறுத்துவது
வேடிக்கையாக இருந்திருக்கூடும்..

அதிரவைத்த இடியொன்றினால்
மின்சாரம் துண்டாகி
சட்டென்று அறையை இருள் கவ்வ
நான் எங்கேனும்
தப்பித்திடுவேனோ என்ற எண்ணத்தில்
அவசரமாய் என் மீது பாய்ந்தது அது..

நான்
அதன் இரையாகி தீர்ந்திருந்தேன்
மின்சாரம் வருவதற்கு முன்பாகவே

05.05.2009

May 10, 2009

தற்கொலைக் குறிப்புகள் - 1


கலங்கரை விளக்கத்தின்
மெல்லிய ஒளி
அலுவலக மொட்டை மாடியைத்
தழுவிச் சுழலும்
இந்த பின்னிரவு வேளையில்
மே மாதத்தின் - "மின்னலே நீ வந்ததேனடி"
பாடலை ஒலிக்கவிட்டு
கேட்டுக்கொண்டிருக்கிறேன்..

மாடியிலிருந்து
கீழேக் குதித்து
தற்கொலை செய்துகொள்வது
உச்சக்கட்ட சுதந்திரம் என்று
சொல்லிவிட்டுப் போகிறது ஒளிக்கீற்றொன்று
பாடலின் இடையிடையே

07.05.2009
  • அய்யனாரின் வ.வெ.தொ.அ.வெ.கு 1,2,3.., கிருத்திகாவின் முகமூடி கவிதைகள் 1,2,3.., மாதிரி தற்கொலை குறிப்புகள்-1.. ஆனா 2,3,4... வருமா என்றெல்லாம் எனக்கும் தெரியாது.. :)

  ©Template by Dicas Blogger.

TOPO